பொடிசியின் கடிதம்

புதன், 10 பிப்ரவரி, 2010

அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாளென. அவள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்கினான். கடிதத்தின் வலது ஓரத்தில் எழுதப்பட்டிருந்த அவள் அடிக்கடி அவனைச் செல்லமாக அழைக்கும் அந்த வார்த்தையை அவனது பெருவிரல் தானே தடவியது.

நேசமிக்கப் பொடியனுக்கு,
எதேச்சையாய் எப்படி நமது சந்திப்பு நிகழ்ந்ததோ அதைப் போலத்தான் உன் மீதான ஈர்ப்பும் எனக்குள் சடாரென விழுந்தது. திடீரெனக் கொட்டிப் போகும் மழையைப் போலான உன் வருகை எனக்குள் மகிழ்விற்கான விதைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் துளிர்க்கச் செய்தது. நாட்களாக ஆக எந்த கணத்தில் அது காதலாக அல்லது அதையும் கடந்த ஒன்றாக உருமாறியதென சொல்லத் தெரியவில்லை. ஆனால் உன்னை நினைத்திருக்கும் நொடிகள் தோறும் பரவசமடைந்திருக்கிறேன். உன்னிடம் பேசும் இரவுகள் தோறும் பாதுகாப்பை உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே சிந்திக்கும் ஒருவனை, என்னை விட மேலாக புரிதல் உள்ளவனை சந்தித்த சந்தோஷம் எனக்குள் இன்று வரை ஒவ்வொரு நாளும் இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கும். உன்னைச் சந்தித்த நாளிலிருந்து ஒருநாள் கூட பேசாமல் இருந்ததில்லை. அப்படி இருக்க முடிந்ததில்லை. சிலந்தி தன் எச்சிலால் பின்னிய வலையில் ஒளி பட்டு மின்னுவதைப் போல என் நேசம் ஜொலித்ததை என்னால் அனுபவிக்க முடிந்தது. என்னைப் போலத்தான் நீயும் இருப்பாயா என தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பெண் தன் நேசத்தை முதலில் தான் நேசிக்கும் ஆணிடம் வெளிப்படுத்துவது என்பது நமது சமூகத்தில் இயல்பான ஒன்றாகப் பார்க்கப் படுவதில்லை. ஒருவேளை தனது நேசம் நிராகரிக்கப்படும் கனத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாது இருக்கலாம். ஆன போதும் எனது பேச்சுக்களின் வழி, குறுஞ்செய்திகளின் மூலம் அவ்வப்போது உன்னை அதிகம் நேசிப்பதை வெளிப்படுத்தியே இருக்கிறேன் என்பதை நீயுமறிவாய். ஆயினும் ஒருமுறை கூட நான் எதிர் பார்த்திருக்கும் வார்த்தைகள் உன்னிலிருந்து உதிக்கவே இல்லை. இருந்த போதிலும் உன் மீதான நேசம் உதிர்ந்து போய்விடவில்லை.

                                             முக்கிய அன்றாடச் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் கூறத் துவங்கி உன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்வதில்லை என்ற நிலை வந்தது. கடந்த ஆறு மாதங்களில் இடையிடையே ஓரிருமுறை சண்டையிட்ட இரவுகளைத் தவிர ஓரிரவு கூட நாம் பேசாமல் இருந்ததில்லை. ஆயிரமாயிரம் விஷயங்களை பகிர்ந்திருக்கிறோம். நமது நள்ளிரவுப் பேச்சுக்களுக்கும், அவ்வப்போதான சந்திப்புகளுக்கும் நிலவும், இரவும், எந்திரப்பறவையுமே சாட்சிகளாயிருக்கின்றன. பகல் போதெனில் காக்கையும் கூட சாட்சி என்பதை நாமறிவோம். நீ அடிக்கடி சொல்வதுண்டு, நேர்மறையாகச் சிந்திக்க வேண்டுமென்று.

“நல்லவர்கள் கூட தோற்றுப் போகலாம்
  நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை” என்ற பொன்மொழியின் சாராம்சத்தை உள்ளடக்கியிருக்கும் உனது பேச்சு. அந்த எண்ணத்தில்தான் நானும் இருந்தேன். உன்னோடு இத்தனை நாட்கள் வெறும் பேச்சோடு மட்டும் நெருங்கியிருக்கிறேன் என்று நீ நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. உன்னைப் பொறுத்தவரை வார்த்தைகள் வெறும் எழுத்துக்களின் கூட்டாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வார்த்தைகள்தான் வாழ்க்கை.

 எனக்குப் பிடித்த எல்லாம் உனக்குப் பிடிக்க என்னை மட்டும் ஏன் பிடிக்காமல் போனது? என்று திரைப்படப்பாடல் ஒன்று வரும். அதுபோல் நிகழ்ந்து விடுமோ என பயந்ததுண்டு.  நெருங்கியும் நெருங்காமலும் எப்படியோ உன் பயணம் எனக்குள் துவங்கிவிட்டது. உன்னைப் பார்க்க வேண்டுமென நினைத்தால் நிழற்படம் இருக்கிறது. பேச வேண்டுமென்றால் உடனே பேசி விடுகிறாய் அல்லது நானே எனக்குள் உன்னிடம் பேசிக் கொள்கிறேன். எதைப் பற்றியும் எந்த நேரத்திலும் ஆலோசிக்க முடிகிறது. வேறென்ன வேண்டும் உன்னிடமிருந்து எனக்கு?

எல்லா ஆண்களைப் போலான சராசரிக் கண்ணோட்டம் உனக்கு இல்லை. ஆனால் எல்லாப் பெண்களையும் போல சராசரிக் கனவுகள் எனக்கு இருக்கிறது. மூடநம்பிக்கை வேரூன்றிய சமூகத்தின் பின்புலத்திலிருந்து வந்த நான் பகுத்தறிவின் பாதையில் சமீப காலமாகத்தான் நடைவண்டி பயில்கிறேன். நீயோ பகுத்தறிவே பின்புலமாகக் கொண்டு வளர்ந்தவன். என்னைவிட எதையும் ஆழமாக யோசித்து செயல்படும் திறனுண்டு உனக்கு. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் உன்னிடம் என் நேசத்தை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போய் திரும்பியிருக்கிறேன்.  பெரும்பாலான சமயங்களில் நீ பேசும் போது நட்பின் எல்லை கடந்து பேசியதில்லை. நானோ அதையும் கடந்தே உன்னிடம் பழகி வருகிறேன். நானும் ஒவ்வொரு நாளும் இப்போது சொல்வாய், அப்போது சொல்வாயென காத்திருந்து சோர்ந்து விட்டேன். நீ பொறுமை பெரிதென்று சொல்வாய். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

எதுவும் காலத்தோடு பயிர் செய்யப்பட வேண்டும். காலம் கடந்தால் எந்த ஒரு உதவியும்கூட பயனற்றதாகி விடும். எனவே இவ்வளவு நாட்களில் உன்னிடம் இருந்து வெளிப்படாத என் மீதான உன் நேசம் இனிமேலும் வெளிப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நான் வெளிப்படுத்தி நீ நிராகரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் திறனும் என்னிடமில்லை. ஆனால் உன்னை நேசித்துக் கொண்டே இருப்பேன் என் காலம் கடந்த பின்னும் என் எழுத்துக்களில். நான் உன்னை நேசித்து வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். இப்போதிருக்கும் சந்தோஷத்துடனே போகிறேன். எப்போதும் சந்தோஷமாக இரு. அதுவே என் ஆயுளின் வேண்டுகோள். என் வேண்டுகோளைக் கட்டளையாக்கிச் செல்கிறேன் பொடியா...
                                                               இப்படிக்கு - நேசமிக்க பொடிசி.
பின்குறிப்பு:
இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமென்று தெரியாது. உன்னிடம் கிடைக்கும் போது நான் இருப்பேனா என்றும் தெரியாது. ஆனால் என் நேசிப்பிற்குரியவன் நீ என்பதை சொல்வதே இந்த கடிதத்தின் நோக்கம். சந்தோஷமாக இரு. நான் விரும்புவது அதைத்தான்.

கடிதத்தை படித்து முடிக்கும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்தது அவனுக்கு. “ ஏன் இப்படி நடந்து கொண்டாய். உன் மீது நேசமின்றியா நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன். நீ விரும்பும்போதெல்லாம் பேசினேன். நீ நினைத்த போதெல்லாம் உன்னை வந்து சந்தித்தேன். நீ கொடுத்த பரிசுகளை ஏற்றுக் கொண்டேன். ஏன் இதை புரிந்துகொள்ளவில்லை பொடிசி. உன் சந்தோஷம்தான் நான் காணும் சந்தோஷம் என்று சொல்லியிருக்கிறேன். அதைக் கூட உணரவில்லையா? விளையாட்டாய் சில சமயங்களில் பேசுவதை வினையாக எடுத்துக் கொண்டு இப்படிச் செய்து விட்டாயே.. பொடிசி.. உன்னை ரொம்ப பிடிக்கும் பொடிசி..” என்று அவள் படுத்திருந்த கட்டிலின் அருகில் வாய்விட்டே புலம்பினான். இன்னும் என்னவெல்லாமோ சொல்ல எத்தனித்தவன் கரைகடந்த கண்ணீரால் பேச்சற்று நின்றிருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே நுழைந்த மருத்துவர், 'சிறிய காயம்தான். அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கிறது. சற்று நேரத்தில் சுயநினைவு வந்துவிடும்' எனக் கூறிவிட்டுச் செல்ல அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

இன்று இரவு எட்டு மணிக்கு அலுவலகம் விட்டு இரு சக்கர வாகனமொன்றில் வீடு திரும்பியிருக்கிறாள். வரும் வழியில் சிக்னலில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த அடியில்லை என்ற போதும் விழுந்த அதிர்ச்சியில் மயங்கியவளை அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்லில் இருந்த நம்பருக்கும், அவள் அலுவலக விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். முதலில் மருத்துவமனை வந்த தோழிதான் பொடிசியின் கைப்பையை அவன் வந்த பின் அவனிடம் கொடுத்திருக்கிறாள். அதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் அவனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் அவளருகில் பதறிப் போய் நிற்கிறான் அவள் கண் விழிக்கும் தருணத்திற்காக..
READ MORE - பொடிசியின் கடிதம்

தேவதையும் செல்லக்குட்டியும்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

ரயிலுக்காய் காத்திருக்கிறாள் தேவதை ...
இன்னும் சற்று நேரத்தில் செல்லக்குட்டி வந்துவிடக் கூடும் ...
இரண்டு மாத பிரிவினை இருவரும் தாங்கிகொண்டதன் காரணம் செல்லக்குட்டி நிச்சயம் தேவதையுடன் சென்னையில் ஒன்றாய் தங்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையே... ரயில் வரும் ஓசை தொலைதூரத்தில் கேட்க ஆவலுடன் எட்டிபார்த்து கொண்டிருக்கிறாள் தேவதை ..

செல்லக்குட்டியை உங்களுக்கு நிச்சயம் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .அதுவும் தேவதையைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்..
ஏனெனில் தேவதையின் எல்லாமுமாய் இருக்கும் செல்லக்குட்டிக்கு வயது இரண்டை தொட்டுக் கொண்டிருக்கிறது..செல்லக்குட்டி வீட்டுக்கு வந்ததிலிருந்து செல்லக்குட்டி இல்லாமல் தேவதை வெளியே செல்வதில்லை.. அந்தளவிற்கு இருவருக்கும் பிணைப்பு.. மழை , வெயில் என்று பாராமல் ஊர் சுற்றி வருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை...

ஒருமுறை சென்னை சென்ற தேவதை செல்லக்குட்டியை வீட்டிலேயே விட்டு விட்டு போய்விட திரும்பி வரும் வரை அதன் வயிற்றுக்குள் ஒன்றும் இறங்க வில்லை.. ஒருவாரம் கழித்து திரும்பிய தேவதை முதல் வேலையாய் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஓடிப்போய் செல்லக்குட்டியை பார்த்தால் அது குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்தது..மீண்டும் செல்லகுட்டி பழைய நிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் ஆனது..அதிலிருந்து செல்லக்குட்டியை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை என்ற வாக்குறுதியினை தேவதை தனக்குதானே கொடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது..

செல்லக்குட்டியுடன் வெளியே செல்லும் தோறும் மற்றவர்களின் கவனம் இவர்கள் மீதுதான் பாயும்.. தேவைதைக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும் கூட இன்னொரு பக்கம் வருத்தமாய் இருக்கும். காரணம் பல நேரங்களில் செல்லக்குட்டிக்கு எதுவும் வாங்கிகொடுக்க முடியாத நிலைமை.

இரவு நேரங்களில் யாருமற்ற நெடுஞ்சாலையில் செல்வதென்றால் மார்பில் விழும் முதல் மழைத்துளியைப் போல் அவ்வளவு சுகமானது.. இருவரும் செல்கிற நீண்ட தூர பயணத்தில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்களும் இருவருக்கும் பெரிதாய் தெரிந்ததில்லை..

தேவதை வேலை நிமித்தமாய் மீண்டும் சென்னை செல்ல இந்தமுறை செல்லக்குட்டியை எப்படியாவது இரண்டொரு நாளில் அழைத்துப் போய்விட வேண்டும் என்ற எண்ணினாள். ஆனால் நினைத்தபடி எதுவும் நடக்க வில்லை.. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை..மனிதர்கள் அன்ரிசர்வில் செல்வதே பெரும்பாடு..இதில் செல்லக்குட்டியை எப்படி கூட்டி செல்வது..? என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவாறு தேற்றி செல்லக்குட்டியை அடுத்தவாரம் அனுப்பி வைக்கும் படி வீட்டில் சொல்லிவிட்டு சென்னை கிளம்பினாள் தேவதை..

ஆனால் அது நினைத்தபடி நடக்கவில்லை..இதோ வந்துவிடும்..அதோ வந்துவிடும்.என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது..
தேவதை தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்..எப்பொழுதும் செல்லக்குட்டியை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்ததில் தேவதையைக் காட்டிலும் மற்றவர்கள் செல்லக்குட்டியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியபடி இருந்தனர்..
செல்லக்குட்டி தங்குவதற்கும் அந்த வீட்டில் ஏற்பாடு செய்தாயிற்று..ஆனால் செல்லக்குட்டிதான் வந்தபாடில்லை..

இரண்டு மாத முயற்சிக்குப்பின் இதோ செல்லக்குட்டியின் வருகை .. செல்லகுட்டி வந்திறங்கியது.. சாக்குப்பையினுள் தன்னை பாதி மறைத்து கொண்டிருந்தது செல்லக்குட்டி.. கவுண்டரில் பணம் கட்டிவிட்டு செல்லக்குட்டி மேல் சுற்றப்பட்டிருந்த சாக்கினை அகற்றி பார்த்தால் செல்லக்குட்டிக்கு முதுகில் ஒரு கீறலும் கழுத்தில் ஒரு தழும்பும் இருந்தது.. தேவதைக்கு கண் கலங்கி விட உடன் வந்திருந்த தேவதையின் சித்தப்பா ஒருவாறு தேற்றி இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்...

கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவடைந்த செல்லக்குட்டி இப்போது தேவதையுடன் மீண்டும் பயணத்தை துவக்கியது.. அவள் எப்போது செல்லக்குட்டியை அழைத்தாலும் ஆசையை ஒட்டிக்கொள்ளும்.. அடுத்தவர் கை பட்டாலோ உயிரற்று கிடப்பது போல் தன்னை வெளிப்படுத்தும்..

தேவதை அலுவலகம் முடிந்து திரும்ப அன்று அதிகாலை மூன்று மணியாகி விட்டது.. இருப்பினும் அந்த நேரத்தில் செல்லக்குட்டியுடன் வீட்டிற்கு புறப்பட தயாரானாள். சாலையில் அவர்களை கடந்து செல்லும் வாகனங்கள் இவர்களை கவனிக்காமல் செல்லவில்லை.. செல்லக்குட்டிஎங்கும் நிற்காமல் சென்றது அந்த நாளில்தான்.. எந்த சிக்னலிலும் நிற்கவில்லை.. செல்லகுட்டி அரைமணிநேரத்தில் வீடு வந்து சேர்த்துவிட்டது.. அந்த அதிகாலை தூரலில் சில்லிட்டு நனைந்த செல்லக்குட்டியை துடைத்து விட்டு மாடிப்படிஏறினால் தேவதை.. செல்லக்குட்டியிலிருந்து வடிந்த தண்ணீர் மெது மெதுவாய் வெப்பத்தை குறைத்துவிட்டு குளிரத் தொடங்கியது..

தேவதை யாரிடமும் எப்போதும் வண்டி என்று சொன்னதில்லை செல்லக்குட்டியை ....
READ MORE - தேவதையும் செல்லக்குட்டியும்

அன்புள்ள ஆயிஷாவிற்கு..

தோழி எப்படி இருக்கிறாய்?
உன் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?

நீண்ட நாள் கழித்து இப்போதுதான் ஞாபகம் வந்ததா? என்று நீ நினைக்கக்கூடும்.
ஞாபகங்கள் எப்போதும் அழிவதில்லை தோழி. அவ்வப்போது எதிர்ப்படும் பர்தா முகங்களை பார்க்கையிலும், உன் பேர் கொண்ட எழுத்துக்களை பார்க்கையிலும்,கேட்கையிலும் , எனக்குள் உன் குழந்தையின் பிஞ்சு பாதகங்கள் தழுவும் தோறும் , இஸ்லாமியப் பெயர்கள் என் செவிகளில் நழுவும் தோறும் உனது ஞாபகங்கள் என்னைத் தொட்டுச் செல்கிறது...

எப்படி இருக்கிறது உன் படிப்பு?
பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று விவாதங்கள் சூடேறும் போது நீயும் குழம்பிப் போய்தான் இருப்பாய்? என்ன செய்வது அவ்வப்போவது நம் மக்களுக்கு விவாதத்திற்கு ஏதேனும் ஒருபொருள்தேவைப்படுகிறதே.. எது எப்படியோ நீபடித்துக் கொண்டிருப்பாய் எனபது மட்டும் நீ சொல்லாமலே அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் போன வருடம் எட்டாம் வகுப்புக்கே கணக்குக்கும் ஆங்கிலத்திற்கும் அவ்வளவு ஆர்வமாய் உன் தம்பியிடமும் என்னிடமும் பாடம் கற்றுக் கொண்டாய்..

திருமணத்திற்கு பிறகு பெண்கள் படிப்பது இப்போது அதிகரித்து வருகிறது.. கணவனோ அல்லது கணவன் வீட்டாரோ படிக்க வைப்பார்கள்.. ஆனால் உனது நிலைமை தான் கொஞ்சம் தலை கீழ்.. இரண்டு குழ்ந்தைகளுடன் தாய் வீட்டில் இருந்து படிக்கக் கூடிய நிலைமை.. அம்மா அப்பாவிற்கு பாரமாய் இருக்கக் கூடாது என்பதும் உன் பிள்ளைகளுக்கு உன் சம்பாத்தியத்தில் செலவு செய்ய வேண்டும் என்பது உனக்கான அதிக பட்ச ஆசை என்பதை அறிவேன்.. ஆனால் ஆயிஷா ஒரு பெண் பொருளாதார சுதந்திரம் அடையாமல் முன்னேற்றமோ விடுதலையோ கிடைத்து விடாது என்பதுதான் உண்மை.

இஸ்லாமிய மதத்தில் கணவன் இரண்டு மூன்று திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவை இல்லை.. இந்த காரணமே பெரும்பாலும் அவர்களுக்கொரு துணிச்சலை வழங்குகிறது.. அது மட்டுமின்றி பெண் என்பவள் ஆணுக்கான அணிகலன் என்பதாக பார்க்கப்படும் சமூகப் பார்வையும் ஒரு காரணம். ஆண் தவறு செய்தால் அவன் ஆண்பிள்ளை என்று சொல்லும் சமூகம் ஒரு பெண் சரியாகவே ஒரு காரியத்தை செய்தாலும் ஒரு பெண்ணுக்கு இது தேவையா? என்றே சொல்கிறது. இது மாற வேண்டும்..நாம் தான் மற்ற வேண்டும்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே. இனம் பெருகுவதற்கான ஒரு ஏற்பாடே.
அது பெரும்பாலும் பெண்ணுக்குத் தான் பாதகமாக இருக்கிறது.திருமணம் வாழ்வின் புத்தகத்தில் ஒரு அத்தியாயம். அந்த அத்தியாயம்மட்டுமே புத்தகமாகி விடாது. உனக்கு அது கசப்பை வாரி தெளித்திருந்தாலும் அதற்குள் இரண்டு ஆலம் விதைகளை தூவி போயிருக்கிறது.. உன் குழந்தைகள் உனக்கு எல்லாமுமாய் ஆகி விட்டார்கள்.இனி அவர்களை ஆளாக்குவதே உனக்கான பெரும் பொறுப்பாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் பெண்கள் சிரமப்படுவதற்கு காரணம் பல உண்டு.அதில் முதற்காரணம் பெண்ணை பெற்றவர்களுக்கு உண்டு. படிப்பை பாதியிலேயே நிறுத்துவது.. கணவனை மட்டும் கவனிப்பதே ஒரு பெண்ணுக்கான இலக்கணம் என்று பேசி பேசி நம்மையும் அதை ஏற்றுக் கொள்ள வைப்பது.. குடிகாரனாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வாழ பழக்குவது..இப்படி பல காரணங்கள் இருக்கிறது..

உனது விஷயத்தை எடுத்துக் கொள்.. நீ படிப்பில் படு சூட்டி என்று எத்தனை முறை உன் அம்மா சொல்லிருக்கிறார்கள். ஆனால் ஏழாம் வகுப்பு படித்த போதே பெரிய பெண்ணாகி விட்டாய் என்று உனக்கு திருமணம் முடித்து வைத்து விட்டார்கள். அதோடு உனது குழந்தைத்தனம் மறைந்து பொறுப்புகளை சுமக்கும் பெரிய பெண்ணாக அடையளாப் படுத்தப்பட்டு விட்டாய்..

சமீபத்தில் உன் பேர் கொண்ட படம் ஒன்றை பார்த்தேன் ..அது குறு நாவலாக முன்னரே வந்த போது நான் படித்திருக்கிறேன்..உன்னிடமும் அதை ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.. அந்த குறும்படத்தை பார்க்கையில் ஒவ்வொரு காட்சியிலும் உன் முகம் எனக்குள் வந்து போகிறது.. அந்த சிறுமி உன்னைபோலவே நன்றாக படிக்கக் கூடியவள்..இவளின் அறிவுத்திறனிறகு எந்த ஆசிரியையும் தீனி போட முடியாமல் போக ஒரே ஒரு ஆசிரியை மட்டும் அவளுக்குள் மறைந்திருக்கும் அறிவியல் அறிவையும் , மிக நுட்பமான மனதையும் கண்டு பிடித்து இவள் பின்னாளில் ஒரு விஞ்ஞானியாக வருவாள் என்று நினைக்க அந்த பெண்ணோ தன் வகுப்பு ஆசிரியைகளின் அடிக்கு பயந்து அடி வாங்கினால் வலிக்காமல் இருக்க மருந்தொன்று கண்டு பிடிக்கிறாள். அந்த மருந்தை தன்னிலே பரிசோதனை செய்யும் முயற்சியில் இறந்து போகிறாள்..அவளுக்கு நெருக்கமான விருப்பமான அந்த ஆசிரியை கதறுகிறாள்..
அந்த அழுகையில் ஒரு ஒரு உயிர் போய் விட்டதே என்ற கவலையும் அந்த குழந்தையின் உணர்வை மதிக்க தெரியாத அந்த ஆசிரியர்களையும் அவளைச் சார்ந்தவர்களையும் இனி என்ன செய்வீர்கள் என்ற பார்வையுடன் அரற்றுவாள் அந்த ஆசிரியை.

அந்த ஆயிஷாவின் கேள்விகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இன்னும் ஒரு பெண் விஞ்ஞானி கூட உருவாக வில்லை.? என்ற கேள்வி மட்டுமல்ல அவளின் ஒவ்வொரு கேள்வியும் எல்லோரையும் உலுக்கிக் கொண்டே இருக்கும் .

ஆயிஷா இன்னும் ஒன்றும் குறைந்து விடவில்லை..உன் குழந்தையும் நீயும் ஒன்றாக படிப்பதே உனக்கொரு ஆனந்தத்தை தரும் . அவர்கள் ஒன்றாம் வகுப்பு நீ பத்தாம் வகுப்பு அவ்வளவே.. தொடர்ந்து படி.. பாடப் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து..

உனக்கான வெளி திறந்திருக்கிறது..பைக் ஓட்டக் கூட பர்தா போட்டுக் கொண்டு கற்றவள் ஆயிற்றே .. யோசி.. உன்னை பின்பற்றும் குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இரு.. உன் வார்த்தைகளால் அல்ல..செயல்பாடுகளால் அவர்களை பின்பற்ற செய்.. சில அடையாளங்களை நீ துறக்கும் போது உனக்கென ஒரு புது அடையாளம் உருவாகும் தோழி ஆயிஷா..

உன் நட்பில் இளைப்பாறும்
இவள் பாரதி
READ MORE - அன்புள்ள ஆயிஷாவிற்கு..

5E

நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்..நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு காத்திருக்கும் போதுதான் அந்த பஸ் வரவே வராது.. illanaa ethitha mathiri oppositela pokum.. இல்ல ஈ போக முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கும்..

காலைல எவ்வளவு சீக்கிரத்தில வந்தாலும் எல்லா பஸ்லயும் கூட்டம் நிரம்பி வழியுது.. என்ன செய்யட்டும் ..நானும் சீக்கிரம் வந்து பஸ் ஏறலாம்னு நினைச்சா கூட குளிச்சு கிழிச்சு கிளம்பு எட்டு மணியாயிடுது..

இதோட ஆபிஸ் மூணு இடத்துக்கு மாறிடுச்சு.. அப்பவும் ஒரே பஸ் தான். வடபழனில இருந்து அந்த நூறடி ரோட்டுல போலீஸ் ஸ்டேசனுக்கு எதித்த மாதிரி நின்னா வடபழனி டெப்போல இருந்து 5E வரும். பெசன்ட் நகர் வரைக்கும் போகும்..முதல்ல ஆபீஸ் சைதாபேட்டைல இருந்துச்சு.. அப்பவும் 5E தான்.. அதுக்கப்புறம் பெசன்ட்நகர்க்கு ஆபிஸ் மாறுச்சு.. இப்ப அடையாருல அதனால பஸும் மாறல.. டைமும் மாறல.. இப்ப இன்னும் கொஞ்சம் சீக்கிரமா போக வேண்டியிருக்கு.. அதுவும் ட்ராபிக் ல நின்னு நின்னு போறதுக்கு பஸ் பின்னால டிக்கெட் எடுக்காம நடந்தே போகலாம்னு தோணும்... ஆபிஸ்ல ட்ராபிக் னு சொல்லி தப்பிக்க மிடியாது..அதான் சென்னைல ட்ராபிக் அதிகம்னு தெரியுமே..முன்னமே கிளம்பிவர வேண்டியதுதானே அப்டின்னு சொல்வாங்க..
சில நேரங்கள்ல அப்டியே சீக்கிரம் கிளம்பினாலும் அப்பாவும் மாட்டிக்குவோம்.. ட்ராபிக்ல..

அதுமட்டுமில்ல நீங்க ஒரு எழுத்தாளராவோ , கவிஞராவோ இருந்தா ஒவ்வொரு சிக்னலா நிக்கும் போதும் மொபைல்ல இல்ல நோட்பேட்ல எழுத ஆரம்பிச்சா ஒரு வருஷத்துல ஒரு நாவலே வெளியிட்டுடலாம்.. அந்தளவுக்கு டிராபிக்.. அதுவும் கோயம்பேடு சிக்னல் கேக்கவே வேணாம்.. அரைமணி நேரம் ஒருமணி நேரம்லாம் சர்வ சாதரணமாதான் இருக்கும்..

உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா? சென்னைல இருக்குறவங்களுக்கு திரியும். மத்த ஊர்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்காது சென்னைல வந்து பஸ்ல போகாம இருந்துருந்தா..

சென்னைல முழுக்க கவர்மென்ட் பஸ்தான்.. தனியார் பஸ் கிடையாது.. அப்டி சொல்லிக்கலாமேயொழிய ஒவ்வொரு பஸ்லயும் ஒவ்வொரு டிக்கெட் ..வைட் போடுனா.. அதுக்கு தனி டிக்கெட் .. இன்னொன்னு டோர் உள்ள பஸ்.. அதுக்கு தனி டிக்கெட்.. இன்னொரு பஸ் இருக்கு.. சொல்ல மறந்துட்டனே ஏசி பஸும் இருக்கு..அதுலெல்லாம் நம்மள மாதிரி ஆட்கள் ஒரு நாள் டிக்கெட் எடுத்து போறதுக்கு மத்த பஸ்ல போன அஞ்சு நாளைக்கு போயிட்டு திரும்பிடலாம் அவ்வளவு காஸ்ட்லி..

இந்த பஸ்ல ஏறுனா இன்னொரு தொல்லை இருக்குங்க.. நீங்க முன்னால நின்னாலும் சரி..பின்னால நின்னாலும் சரி.. உட்கந்திருந்தாலும் சரி..நின்னாலும் சரி.. நீங்க இன்னொருத்தருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தே ஆகணும்.. ஒருதடவை எடுத்துக் கொடுத்தா என்ன கொறஞ்சிடுவோம்னு சொல்றிங்களா? ஒருதடவை ரெண்டு தடவை கிடையாதுங்க.. பஸ் ஒவ்வொரு ஸ்டாப்ல நின்னு கிளம்பும் போதெல்லாம்தான்.. நீங்க ஒரே டைம் ல ரெண்டு வேலை பாக்குற மாதிரி.. உங்க ஸ்டாப் வந்தோடன இறங்கி போற பயணியும் நீங்கதான்.. அதுவரை பஸ்குள்ள கண்டக்டரும் நீங்கதான்... டிக்கெட் வாங்கி கொடுத்து மீதி சில்லரை வாங்கி கொடுக்குறதுக்குள்ள உங்களுக்கு வேர்த்து கொட்டிடும்..

சரி.. கண்டக்டர் என்ன பண்ணுவாருனு தான கேக்குறிங்க.. அவர் நின்ன இடத்த விட்டு..இல்ல அவர் பின் கதவோரத்துல உக்காந்திருக்க சீட்ட விட்டு எந்திரிக்க மாட்டாரு..அவர சொல்லி குத்தமில்லீங்க.. உள்ள காலாற நடக்கவா இடம் இருக்கு.மூச்சு கூட அடுத்தவன் மேல்தான் விட வேண்டியிருக்கு.. அந்தளவுக்கு கூட்ட நெரிசல்.. இதுல சில பேர் பண்ற அலும்பு இருக்கே சொல்லவே முடியாது.. இப்படி தான் தினமும் ஒவ்வொரு பொண்ணும் என்னை போலவே போறாங்க வலிகளோட வேலைக்கு..

சரி.. நான் போக வேண்டிய 5E வந்திடுச்சு.. வரட்டுமா?
READ MORE - 5E