பொடிசியின் கடிதம்

புதன், 10 பிப்ரவரி, 2010

அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாளென. அவள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்கினான். கடிதத்தின் வலது ஓரத்தில் எழுதப்பட்டிருந்த அவள் அடிக்கடி அவனைச் செல்லமாக அழைக்கும் அந்த வார்த்தையை அவனது பெருவிரல் தானே தடவியது.

நேசமிக்கப் பொடியனுக்கு,
எதேச்சையாய் எப்படி நமது சந்திப்பு நிகழ்ந்ததோ அதைப் போலத்தான் உன் மீதான ஈர்ப்பும் எனக்குள் சடாரென விழுந்தது. திடீரெனக் கொட்டிப் போகும் மழையைப் போலான உன் வருகை எனக்குள் மகிழ்விற்கான விதைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் துளிர்க்கச் செய்தது. நாட்களாக ஆக எந்த கணத்தில் அது காதலாக அல்லது அதையும் கடந்த ஒன்றாக உருமாறியதென சொல்லத் தெரியவில்லை. ஆனால் உன்னை நினைத்திருக்கும் நொடிகள் தோறும் பரவசமடைந்திருக்கிறேன். உன்னிடம் பேசும் இரவுகள் தோறும் பாதுகாப்பை உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே சிந்திக்கும் ஒருவனை, என்னை விட மேலாக புரிதல் உள்ளவனை சந்தித்த சந்தோஷம் எனக்குள் இன்று வரை ஒவ்வொரு நாளும் இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கும். உன்னைச் சந்தித்த நாளிலிருந்து ஒருநாள் கூட பேசாமல் இருந்ததில்லை. அப்படி இருக்க முடிந்ததில்லை. சிலந்தி தன் எச்சிலால் பின்னிய வலையில் ஒளி பட்டு மின்னுவதைப் போல என் நேசம் ஜொலித்ததை என்னால் அனுபவிக்க முடிந்தது. என்னைப் போலத்தான் நீயும் இருப்பாயா என தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பெண் தன் நேசத்தை முதலில் தான் நேசிக்கும் ஆணிடம் வெளிப்படுத்துவது என்பது நமது சமூகத்தில் இயல்பான ஒன்றாகப் பார்க்கப் படுவதில்லை. ஒருவேளை தனது நேசம் நிராகரிக்கப்படும் கனத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாது இருக்கலாம். ஆன போதும் எனது பேச்சுக்களின் வழி, குறுஞ்செய்திகளின் மூலம் அவ்வப்போது உன்னை அதிகம் நேசிப்பதை வெளிப்படுத்தியே இருக்கிறேன் என்பதை நீயுமறிவாய். ஆயினும் ஒருமுறை கூட நான் எதிர் பார்த்திருக்கும் வார்த்தைகள் உன்னிலிருந்து உதிக்கவே இல்லை. இருந்த போதிலும் உன் மீதான நேசம் உதிர்ந்து போய்விடவில்லை.

                                             முக்கிய அன்றாடச் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் கூறத் துவங்கி உன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்வதில்லை என்ற நிலை வந்தது. கடந்த ஆறு மாதங்களில் இடையிடையே ஓரிருமுறை சண்டையிட்ட இரவுகளைத் தவிர ஓரிரவு கூட நாம் பேசாமல் இருந்ததில்லை. ஆயிரமாயிரம் விஷயங்களை பகிர்ந்திருக்கிறோம். நமது நள்ளிரவுப் பேச்சுக்களுக்கும், அவ்வப்போதான சந்திப்புகளுக்கும் நிலவும், இரவும், எந்திரப்பறவையுமே சாட்சிகளாயிருக்கின்றன. பகல் போதெனில் காக்கையும் கூட சாட்சி என்பதை நாமறிவோம். நீ அடிக்கடி சொல்வதுண்டு, நேர்மறையாகச் சிந்திக்க வேண்டுமென்று.

“நல்லவர்கள் கூட தோற்றுப் போகலாம்
  நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை” என்ற பொன்மொழியின் சாராம்சத்தை உள்ளடக்கியிருக்கும் உனது பேச்சு. அந்த எண்ணத்தில்தான் நானும் இருந்தேன். உன்னோடு இத்தனை நாட்கள் வெறும் பேச்சோடு மட்டும் நெருங்கியிருக்கிறேன் என்று நீ நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. உன்னைப் பொறுத்தவரை வார்த்தைகள் வெறும் எழுத்துக்களின் கூட்டாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வார்த்தைகள்தான் வாழ்க்கை.

 எனக்குப் பிடித்த எல்லாம் உனக்குப் பிடிக்க என்னை மட்டும் ஏன் பிடிக்காமல் போனது? என்று திரைப்படப்பாடல் ஒன்று வரும். அதுபோல் நிகழ்ந்து விடுமோ என பயந்ததுண்டு.  நெருங்கியும் நெருங்காமலும் எப்படியோ உன் பயணம் எனக்குள் துவங்கிவிட்டது. உன்னைப் பார்க்க வேண்டுமென நினைத்தால் நிழற்படம் இருக்கிறது. பேச வேண்டுமென்றால் உடனே பேசி விடுகிறாய் அல்லது நானே எனக்குள் உன்னிடம் பேசிக் கொள்கிறேன். எதைப் பற்றியும் எந்த நேரத்திலும் ஆலோசிக்க முடிகிறது. வேறென்ன வேண்டும் உன்னிடமிருந்து எனக்கு?

எல்லா ஆண்களைப் போலான சராசரிக் கண்ணோட்டம் உனக்கு இல்லை. ஆனால் எல்லாப் பெண்களையும் போல சராசரிக் கனவுகள் எனக்கு இருக்கிறது. மூடநம்பிக்கை வேரூன்றிய சமூகத்தின் பின்புலத்திலிருந்து வந்த நான் பகுத்தறிவின் பாதையில் சமீப காலமாகத்தான் நடைவண்டி பயில்கிறேன். நீயோ பகுத்தறிவே பின்புலமாகக் கொண்டு வளர்ந்தவன். என்னைவிட எதையும் ஆழமாக யோசித்து செயல்படும் திறனுண்டு உனக்கு. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் உன்னிடம் என் நேசத்தை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போய் திரும்பியிருக்கிறேன்.  பெரும்பாலான சமயங்களில் நீ பேசும் போது நட்பின் எல்லை கடந்து பேசியதில்லை. நானோ அதையும் கடந்தே உன்னிடம் பழகி வருகிறேன். நானும் ஒவ்வொரு நாளும் இப்போது சொல்வாய், அப்போது சொல்வாயென காத்திருந்து சோர்ந்து விட்டேன். நீ பொறுமை பெரிதென்று சொல்வாய். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

எதுவும் காலத்தோடு பயிர் செய்யப்பட வேண்டும். காலம் கடந்தால் எந்த ஒரு உதவியும்கூட பயனற்றதாகி விடும். எனவே இவ்வளவு நாட்களில் உன்னிடம் இருந்து வெளிப்படாத என் மீதான உன் நேசம் இனிமேலும் வெளிப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நான் வெளிப்படுத்தி நீ நிராகரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் திறனும் என்னிடமில்லை. ஆனால் உன்னை நேசித்துக் கொண்டே இருப்பேன் என் காலம் கடந்த பின்னும் என் எழுத்துக்களில். நான் உன்னை நேசித்து வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். இப்போதிருக்கும் சந்தோஷத்துடனே போகிறேன். எப்போதும் சந்தோஷமாக இரு. அதுவே என் ஆயுளின் வேண்டுகோள். என் வேண்டுகோளைக் கட்டளையாக்கிச் செல்கிறேன் பொடியா...
                                                               இப்படிக்கு - நேசமிக்க பொடிசி.
பின்குறிப்பு:
இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமென்று தெரியாது. உன்னிடம் கிடைக்கும் போது நான் இருப்பேனா என்றும் தெரியாது. ஆனால் என் நேசிப்பிற்குரியவன் நீ என்பதை சொல்வதே இந்த கடிதத்தின் நோக்கம். சந்தோஷமாக இரு. நான் விரும்புவது அதைத்தான்.

கடிதத்தை படித்து முடிக்கும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்தது அவனுக்கு. “ ஏன் இப்படி நடந்து கொண்டாய். உன் மீது நேசமின்றியா நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன். நீ விரும்பும்போதெல்லாம் பேசினேன். நீ நினைத்த போதெல்லாம் உன்னை வந்து சந்தித்தேன். நீ கொடுத்த பரிசுகளை ஏற்றுக் கொண்டேன். ஏன் இதை புரிந்துகொள்ளவில்லை பொடிசி. உன் சந்தோஷம்தான் நான் காணும் சந்தோஷம் என்று சொல்லியிருக்கிறேன். அதைக் கூட உணரவில்லையா? விளையாட்டாய் சில சமயங்களில் பேசுவதை வினையாக எடுத்துக் கொண்டு இப்படிச் செய்து விட்டாயே.. பொடிசி.. உன்னை ரொம்ப பிடிக்கும் பொடிசி..” என்று அவள் படுத்திருந்த கட்டிலின் அருகில் வாய்விட்டே புலம்பினான். இன்னும் என்னவெல்லாமோ சொல்ல எத்தனித்தவன் கரைகடந்த கண்ணீரால் பேச்சற்று நின்றிருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே நுழைந்த மருத்துவர், 'சிறிய காயம்தான். அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கிறது. சற்று நேரத்தில் சுயநினைவு வந்துவிடும்' எனக் கூறிவிட்டுச் செல்ல அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

இன்று இரவு எட்டு மணிக்கு அலுவலகம் விட்டு இரு சக்கர வாகனமொன்றில் வீடு திரும்பியிருக்கிறாள். வரும் வழியில் சிக்னலில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த அடியில்லை என்ற போதும் விழுந்த அதிர்ச்சியில் மயங்கியவளை அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்லில் இருந்த நம்பருக்கும், அவள் அலுவலக விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். முதலில் மருத்துவமனை வந்த தோழிதான் பொடிசியின் கைப்பையை அவன் வந்த பின் அவனிடம் கொடுத்திருக்கிறாள். அதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் அவனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் அவளருகில் பதறிப் போய் நிற்கிறான் அவள் கண் விழிக்கும் தருணத்திற்காக..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக