பூமியும் காதலும் வேறானதல்ல

திங்கள், 1 மார்ச், 2010

காதலைப் பற்றியே பேசுவதாக சிலர் சலித்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைப் பேசுவதில் தவறென்ன? காதலைப் பற்றி பேசும் போது எங்கும் தொடங்கி எங்கும் முடிக்கலாம். எங்கும் முடித்து எங்கும் தொடரலாம். காதலுக்கு விளக்கம் சொல்ல யாராலும் முடியாது. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதைப் போல உணர்வுகளும் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம். காதல் என்பது இருவர் மட்டுமே விளையாடக் கூடிய விளையாட்டுத் திடல். காதல் என்பது இருவர் மட்டுமே உலவுக்கூடிய வெளி. காதல் என்பது இரு முரண் கொண்ட மனங்களின் சேர்க்கை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

காதல் என்பது ஒரு ஆண் பெண்ணிடத்திலோ, ஒரு பெண் ஆணிடத்திலோ வைப்பது மட்டுமல்ல. ஒரு தாய் தன் குழந்தைகளிடத்தும், ஒரு சகோதரன் தன் சகோதரியிடத்தும் காட்டும் அன்பைக் கூட காதல் என்ற சொல்லில் குறிக்கிறது மேற்கத்திய கலாச்சாரம். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு நம்மவர்களிடம் இருக்கவே செய்கிறது. தமிழில் இரண்டு பேருக்கான அன்பை பல சொற்களால் குறிக்கிறோம். தமிழைத் தவிர வேறு மொழியில் இவ்வாறான போக்கு இருப்பது கூட அரிதுதான். பெற்றோர் பிள்ளைகளிடத்து வைத்திருப்பது அன்பு, சகோதரி சகோதரியிடத்து காட்டும் அன்பு பாசம், நண்பர்கள் தோழிகளுக்கிடையே இருப்பது நட்பு, தொழிலாளி முதலாளியிடத்து கொண்டிருக்கும் நேசம் விசுவாசம், குடிமகன் தன் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பு தேசப்பற்று இப்படி பலவிதமான சொற்களால் அன்பினை குறிக்கிறோம். இது தமிழுக்கே உரிய சிறப்பு. 

வீழ்ச்சிதான் எங்கும் மகிழ்ச்சியான விஷயம். மலையிலிருந்து விழும் நீரின் வீழ்ச்சிதான் அருவி. மேகத்திலிருந்து விழும் நீரின் வீழ்ச்சிதான் மழை. செடியிலிருந்து விழும் இலைகளும், பூக்களும்தான் உரம். இப்படி வீழ்ச்சிதான் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காதலில் வீழ்வதும் மகிழ்ச்சியான விஷயம். காதலில் வீழ்த்துவதும் கூட. 

‘காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது’ என்று ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை ‘இயற்கை’ படத்தில் இயக்குனர் ஜனநாதன் பயன்படுத்தியிருப்பார். அது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் அதாவது காதல் முளைப்பதற்கு அது தொடக்கமாக இருந்தாலும் பின் அது தொடர்ந்து வளர்வதற்கு நிச்சயம் காரணம் இருக்கவே செய்யும் அல்லது அந்த காதல் சில பல காரணங்களைக் கற்பித்துக் கொள்ளும். ஒரு விதை எங்கும் விழலாம். அது மண்ணைப் பொறுத்தும், அதன் வளத்தைப் பொறுத்துமே விருட்சமாவதற்கான வேலைகள் நடைபெறும். காதலும் எந்த காரணமும் இல்லாமல் வரலாம். அது தொடர்ந்து நிலைக்க சில காரணங்களை பிற்பாடு கற்பித்துக் கொள்ளும். காதல் விட்டுக் கொடுப்பது மட்டுமல்ல. அப்படியே ஏற்றுக் கொள்வதும் கூடதான். 

நாம் இங்கு பேச இருப்பது இரு மனங்களுக்கிடையேயான காதல் மட்டும் என்று ஒரு குறுகிய எல்லையை வரையறுக்க விரும்பவில்லை. யாரும் எந்த காதலைப் பற்றி பேசவும் கட்டுப்பாடு ஏதுமில்லை. காதல் கட்டுப்பாடுகளற்றது. ஆனால் கட்டுக்குள் வைக்கக் கூடியது. காதல் ஒரு காற்று யாரும் சுவாசிக்காமல் இருக்க முடியாது.

‘அணுஅணுவாய் சாக 
முடிவெடுத்தபின் காதல் 
சரியான வழிதான்’
என்ற கவிஞர் அறிவுமதியே தன்னுடைய கட்டுரை ஒன்றில் 
‘அணுஅணுவாய் வாழ
முடிவெடுத்தபின் காதல் 
சரியான வழிதான்’
என்றும் சொல்லியிருக்கிறார். 

தோற்கிற இடத்தில்தான் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் வெற்றி பெறுகிற காதலில் காதல் தொலைந்து போகிறது அல்லது பலவீனமாகி விடுகிறது என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதலில் தோற்று வலியுடன் வாழ்க்கையில் சாதிப்பதை விட வெற்றி பெற்று சந்தோஷத்துடன் சாதிப்பதே பெருமைக்குரியது. தோல்வியடைவதற்காக யாரும் காதலிப்பது கிடையாது. வெற்றி பெறத்தான் அது துடிக்கிறது. அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு இவர்களை விட சிறந்த காதல் ஜோடியாக காரல் மார்க்ஸையும் ஜென்னியையும் பார்க்கிறேன். காரல் மார்க்ஸின் மூலதனத்திற்கு காதல் உந்துசக்தியாகத்தான் இருந்ததேயொழிய உறுத்தலாக இல்லை. மூலதனம் என்று உலகமே கொண்டாடும் அரிய பொக்கிஷத்தை தந்த மார்க்ஸின் கடும் உழைப்பிற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத நூலிழையாக இருப்பது ஜென்னியின் காதல். ஆதலால் காதலில் வெற்றி பெறுவது இன்னுமாய் சாதிக்க வைக்கும். 

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’  
- என்ற பாரதிதாசனின் கூற்று மார்க்ஸ் - ஜென்னியின் காதலில் மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றாகவே நான் அறிகிறேன். 

காதல் அடிமைப் படுத்தும் என்பதை விட அடிமைப் பட்டுக் கிடக்கத் தயாராயிருக்கிறது. காதலில் அடிமைப் பட்டுக் கிடப்பதும் அதீத சுகம்தான். காதல் சாதிக்கத் தூண்டும். சகலத்தையும் ரசிக்கத் தூண்டும். எல்லாவற்றிலும் அழகைப் பார்க்கும். அனைத்தின் மீதும் அன்பைப் பொழியும். 

‘காதல் காதல் காதல் 
காதல் போயின் காதல் போயின் 
சாதல் சாதல் சாதல்’ 
- மகாகவியின் இந்த வார்த்தைகள் அவ்வளவு நிதர்சனமானது. காதல் போனால் சாதல் தான். அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரை இதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்தளவுக்கு காதல் சுகமானதோ அந்தளவுக்கு வலியானதும் கூட. காதல் வாழ்வையும், சாவையும் ஒரு சேர ஒரே தட்டில் ஏந்தி வந்து அள்ளித் தின்னச் சொல்லும். அதிலும் சொல்லாத காதலின் வலி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் உள்ளத்தால் மட்டுமே உணரக் கூடியது. காதல் கொண்ட இதயத்திற்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். அத்துடன் பசி மறந்தும் இருக்கும். 

காதல் இரகசியமானது மட்டுமல்ல.. அவசியமானதும் கூட.
காதல் பொறாமைப் படும்.. பெருமைப் படும்.
காதல் தன்னை வசமிழக்கச் செய்யும். வசியப்படுத்தவும் செய்யும். 

காதல் தான் நேசித்த உள்ளத்தை ஒரு போதும் காயப்படுத்தாது. இப்போது நடக்கக்கூடிய சில நிகழ்வுகள் வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டும், நேரத்தைப் போக்கிக் கொள்வதுமாக இருக்கிறது என்பதை நாமறிவோம். நேரத்தை வீணாக்கக் கூடிய காதல் தானும் வீணாகும். நேரத்தை ஆக்க வழியில் செலவு செய்யும் காதலே உண்மையாக உறுதியாக இருக்கும். இதில் செலவழிக்கும் நேரமும் முதலீடாகவே கருதப்படும். அதற்காக அலுவலக வேலையை அந்த நேரத்தில் உட்கார்ந்து செய்வது என்று பொருளல்ல. தன்னை உணர்வது, தன்னைத் தருவது, ஊக்கப்படுத்துவது, உற்சாகப்படுத்துவது என்று காதல் தன் நேரத்தை சரியான முறையில் செலவு செய்யும். அப்படி செய்வது அமரத்துவமான காதல். ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லக் கூடிய காதல். 

முதலில் புற அழகைக் காணக் கூடிய காதல் சில நாட்களில் உள்ளழகைக் கண்டு தெளிந்து அகவயப்பட்டு தொடரும் போதுதான் அது நிலைத்து நிற்கும். அழகு என்பது ஆளாளுக்கு மாறுபடும். யாரார் மீது அன்பு செலுத்தப்படுகிறதோ அவர்கள் எல்லோரும் அழகாகவே தெரிவார்கள். அழகு என்பது அன்பின் வெளிப்பாட்டில் அறியப்படுவதுதான். ஆனால் காதல் கொண்ட உள்ளம் தானே அனிச்சையாய் அழகாகி விடும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது காதலுக்கு சரியாகப் பொருந்தக் கூடியது. அகத்தில் நுழைந்த அழகான காதல் அந்த முகத்தையும் அழகாக்கி விடுகிறது. 

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பது அனைவரும் சொல்லக்கூடிய ஒன்று. ஆம். அதற்கு கண்கள் இல்லைதான். குறைகளை பெரிதுபடுத்திப் பார்க்கும் கண்கள் இல்லைதான். காதல் என்பது திருமணத்திற்குப் பின் குறைந்து விடுவதல்ல. இன்னும் சொல்லப்போனால் காதலை வெளிப்படுத்த அப்போதுதான் அதிகப்படியான சுதந்திரமும், வெளியும் கிடைக்கிறது. அதனால் திருமணத்திற்குப் பிறகு அது அதிகரிக்க வேண்டுமேயொழிய குறையக்கூடாது. 

ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான விளம்பரத்தில் ஒரு அழகான கவிதையை பயன்படுத்தியிருந்தார்கள். 
‘என் ஆயுள் உள்ளவரை 
உன் காதல் வேண்டும்
இல்லையெனில்
உன் காதல் உள்ளவரை
என் ஆயுள் போதும்’ - மிக அழகான கவிதை காதலைப் போலவே. காதல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறந்திருக்கிறது. 

காதல் ஒன்றில் தான் உயிர்கள் இயங்க முடியும். பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ முடியும். பூமியும் காதலும் வேறானதல்ல. இரண்டிற்குமே ஈர்ப்பு விசை உண்டு. பூமியிலிருந்து மேலே செல்ல செல்ல ஈர்ப்பு விசை குறையும். காதல் நாள் செல்ல செல்ல ஈர்ப்பைக் கூட்டும். அத்தனை கோள்களிலும் பூமி மட்டுமே உயர்வானது. அத்தனை உணர்வுகளிலும் காதல் மட்டுமே சிறப்பானது. 

இப்படிக் காதலைப் பற்றி பேசுவதென்றால் மணிக்கணக்காக, நாட்கணக்காக அல்ல யுகம் யுகமாய் பேச விஷயங்கள் இருக்கிறது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை என்று சொல்வதை விடவும் காதலைப் பாடியே கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம் எனலாம். இங்கும் காதலைப் பாட திரண்டிருக்கும் கவிஞர்களுக்கு வணக்கம் கூறி முதலாவதாக காதல் பற்றி தன் கவிதையைப் பதிய நாம் அழைப்பது பொடியனை...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக