இசையும் நீயும்

வியாழன், 24 பிப்ரவரி, 2011


உனக்கு பிடித்த பாடல்களை 
கேட்கும் ஒவ்வொரு முறையும்
நீ முதல் நாள் சொன்ன விதத்தை 
மீண்டும் ஒருமுறை நினைவில் ஓட்டிப் பார்க்கிறேன்.. 

என் மனம் என்ன நினைக்கும் என்று 
நான் சொல்லாமலே அறிந்து கொள்ளும் உன் மனம்..

   வானம் பார்த்திருக்கும் வேளையில் 
   நான் இரவானால் நீ நிலவாகிறாய்.. 
   நீ நிலவானால் நான் இரவாகிறேன்.. 

  பித்துப் பிடித்து அலையும் மனதின் தாகம் 
  உன்மத்தத்தால் மட்டுமே தீர்க்கக் கூடியது அன்பே.. 
  உன் விழிகள் சிந்தும் புன்னகையை 
  என் விழிகள் ஏந்திக் கொள்ளும்.. 

  உன்னிடம் குழ்ந்தை போல அடம்பிடிக்கும் 
  என் காதல் மனதை 
  உன் காதலின் மனதால் 
  தூக்கி அணைத்துக் கொள்வாய்..  

  ஒற்றை இறகாய் காற்றில் பறக்கும் என்னை 
  உந்தன் சிறகில் வாங்கிக் கொள்வாய்.. 

  ஊரறிய மழையாய்  வந்து போகிறாய்.. 
  நானறிவேன் நீதான் என.. 
  துளியாய் தீண்டி கடலாய் 
  பெருக்கெடுக்கச் செய்வாய்... 
  மீண்டு நானொரு துளியாய் மாறி 
  உன்னைக் கடலாக்குவேன்.. 

  எனக்குப் பிடித்த யாவும் நீயாவாய்.. 
  உனக்கு பிடித்த யாவும் நானாவேன்.
 (எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே - ஜுலி கணபதி )


எப்போதுதான் என்னை சந்திக்க போவதாய் உத்தேசம் ?
எப்போதுதான் என் பேச்சை கேட்கப் போவதாய் எண்ணம்? 
உன் நினைவுகளில் தினம் பிறந்து தினம் இறந்து 
என் நாட்கள் நகர்கிறதே நீ அறிவாயா? 
அறிந்தும் நெருங்காமல் நகர்வாயா? 

என் மீதான கோபம் இன்னும் உனக்குள் இருக்கிறதா?
என் மீதான காதல் இன்னும் வெளியே 
சொல்ல மறுக்கிறதா? 

நீ ஒருவார்த்தை சொன்னாலும் உன் உள்ளம் அறிவேன் 
நீ ஒருபார்வை பார்த்தாலும் உன் காதல் அறிவேன். 

நீ நிழலில்லை.. நான் நிஜமில்லை.. 
நீ நிஜமானாய் .. நான் நிழலானேன்.. 

உந்தன் அருகிலே வாழ்ந்திடவே.. 
எந்தன் மனமும் துடிக்கிறதே.. 
உந்தன் பார்வையில் வாழ்ந்திடவே 
எந்தன் ஜீவனும் முயல்கிறதே.. 

நீ அழகான ரசிகன் தான் அதை நான் அறிவேன்..
நீ அறிவான கலைஞன்தான்  அதை நான் உணர்வேன்..

என் மயக்கம் தீர உன் தயக்கம் தீர்த்து 
என் கண்ணீரை துடைக்கின்ற விரலாய் வாராய்.. 
என் கலக்கம் போக உன் பழக்கம் நீள 
என் கனவொன்றை நிஜமாக்க கண்ணே வாராய்.. 

நீ வரும் பாதை பார்த்தேதான் என் மனம் ஏங்குதே 
நீ தரும் போதை ஒன்றைத்தான் உயிர் தினம் கேக்குதே 
நீ அச்சம் இன்றி என் அன்பைத் தீண்டு.. 
மிச்சம் இன்றி என் கவலை தீரும்.. 

அன்பு ஒன்றுதான் நமக்கிடையில் 
அந்த ஒன்றுதான் உயிர்பசியே.. 
அந்த ஒன்றைத்தான் எனக்கு தந்திட வா.. 

அன்பு ஒன்றுதான் உலகமடா 
அன்பு ஒன்றுதான் கலகமடா 
அன்பு ஒன்றுதான் நிலைக்குமடா நீ வா.. 
(எப்ப நீ என்ன பாப்ப - காளை)

என்னவனே நீ ரசிகன்தான் 
என்னவனே நீ வசீகரன் தான் 
என்னவனே நீ எனக்கேதான் 

உன்னைப் பார்த்த நொடியில் எந்தன் 
நினைவில் புகுத்திக் கொண்டேன்.. 
நீ பேசிய நொடியில் உன்னை எந்தன் 
மனதில் இருத்திக் கொண்டேன்.. 

எத்தனை ஆண்களை தினமும் பார்க்கிறேன்.. 
நீ மட்டும் விதிவிலக்கு.. 
எத்தனை வேலை இருந்தபோதும் 
மனமெங்கும் உன் கிறுக்கு.. 

என்னை ஓர் குழந்தையாய் மாற்றினாய் 
உந்தன் சிரிப்பில் 
என்னை ஓர் குமரியாய் மாற்றினாய் 
உந்தன் நினைப்பில் 

எனக்குள் புயலும் அமைதியும் தருதே 
உந்தன் ஒரு வார்த்தை 
எனக்குள் அழகும் அறிவும் தருதே 
உந்தன் ஒரு பார்வை 

அன்பாய் நீயும் நெருங்குகிறாய் 
அனலாய் நீயே மாறுகிறாய் 
எதுவாய் என்னை மாற்றிடுவாய் ?
முன்கூட்டி சொல்வாயா?

எந்தன் விருப்பம் சொல்லியபின்னே 
இன்னும் ஏன் மௌனம்? 
உந்தன் விருப்பம் எதுவோ அதுவே 
எந்தன் பெருவிருப்பம்.. 

நட்புக்குள் காதல் பூத்திடும் போது 
அதன் மனம் அழகூட்டும் 
காதலை நீயும் தீண்டிடும் போது 
உயிருக்குள் அனல் பூக்கும் ...

உன்னை எனக்குள்ளே தைத்து நானும் ஒளிந்துடுவேன் 
என்னைக் கண்டே பிடிக்க உன்னை கெஞ்சிடுவேன்.. 
இருவரும் இணைந்தே தேடிடுவோம்.. 
இருவரும் இணைந்தே கண்டடைவோம் 
இருவரும் இணைந்தே வாழ்ந்திடுவோம் 
காதல்தான் இருக்கிறதே.. 
( மன்மதனே நீ கலைஞன்தான் - மன்மதன் )

சொன்னால்தான் தருவியா?
சொல்லாமல் வருவியா?
காதல் தவிக்கின்றதே 
எனக்குள்ளே காயங்கள் ஆறுகிற காலங்கள் 
அருகினில் தெரிகின்றதே 
உந்தன் முன்னே சிரித்து நான் கதைக்கின்ற போதும் 
எனக்குள் கண்ணீரடா.. 
எந்தன் மனம் இரும்பு என நான் சொன்ன போதும் 
காந்தம் நீதானடா.. 
ஒரு வார்த்தை உன் குரலில் நான் கேட்காமல் தான் 
தினமும் அழுதேனடா.. 

ஆயிரம் ஆண்களைக் கடந்தவள் - இன்னும் 
ஆயிரம் ஆண்களைக் கடப்பவள் - ஆனால் 
உன் போல் தோன்றாதடா.. 
நான் தினமும் பேசத் துடிக்கிறேன் - ஆனால் 
உன்னிடம் சொல்ல தவிக்கிறேன்.. - உனக்கு 
என்னிலை புரியாதாடா.. 
ஒருமுறை நீயும் ஒரு பெண்ணாக மாறி 
எந்தன் வலி வாங்கடா.. 
அதுவரை உனக்கு நான் என்சொல்லக் கூடும் 
உந்தன் வழி பாராடா..
ஒரு காதல் ஒரு வாழ்க்கை 
இதை எப்போதறிவாய்..
அந்த நாளுக்காய் காத்திருப்பேன்..

ஒரு காதலை சொல்வது என்பது 
ஒரு போருக்கு செல்வதை போலது.. 
என்றே நானும் அறிந்தேனடா.. 
ஒரு காதலை ஏற்பது என்பது 
ஒரு புதிய உயிரை போலது 
என்றே நீயும் உணர்வாயடா..
நால்திசை எங்கும் நான் நடமாடினாலும் 
என் திசை நீதானடா.. 
இன்னிசை எது வந்து எனை தீண்டினாலும்  
இதயத்தின் இசை நீயடா.. 
ஒரு பார்வை ஒரு வார்த்தை 
அட போதுமே 
என் காதல் சுகமாகுமே.
(சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்)

என் இரவுகளின் காதலனே 
என் இதயத்தின் காவலனே 
என் சிறு சிறு ஆசைகள் எல்லாம் 
உன் சேவைக்காக காத்திருக்கின்றன.. 
உன் சிறு சிறு கோபம் எல்லாம் 
என் மோகத்தின் முன் சிதறுகின்றன.. 

வண்ண வண்ண கனவுகள் எனக்குள் 
என்னவென்று  கேட்கிறாய் அதற்குள் 
பொறுத்திரு சொல்கிறேன் 

ஒன்று ஒன்றாய் சொல்லிட எனக்கும் 
ஒவ்வொன்றாய் செய்திட உனக்கும் 
நேரம் வரும் சொல்கிறேன்.. 

என் கன்னம் பிடித்து நெற்றி முடி கோதி
இதழோடு  இதழ் சேர்ப்பாய்.. 
தூக்கத்தில் நானும் உளறிடும் போது 
புன்னகைத்து முத்தமிடுவாய்.. 


என் காதல் ராகம் உனக்குள்ளே இசைப்பேன்.. 
என் தாகம் யாவும் உனக்குள்ளே சேர்ப்பேன்.. 
புதிதாய் தினம் பிறப்பேன் 
உன் காதின் ஓரம் இரகசியம் சொல்வேன்.. 
உன் ஆயுள்வரை அவசியம் வாழ்வேன்.
உனக்கு முன் இறப்பேன்.. 

எனக்கொரு எல்லை எதற்குமே இல்லை 
நாம் காதலில் எல்லை இல்லை.. 
உனக்கொரு தொல்லை என்றுதான் என்னை 
நினைத்திட்டால் என் உயிர் இல்லை.. 

உனக்கொரு பிள்ளை நானென என்று 
உன்னிரு கண் சொல்ல.. 
எனக்கொரு பிள்ளை நீதானென்று 
என்னுயிர் உனைத் தாங்க.. 
சிநேகிதனே சேர்ந்திரு ..
எனக்குள்ளே உயிர்த்திரு.. 
(சிநேகிதனே - அலைபாயுதே)

ஆயிரம் ஆசைகள் எனக்குள் பூக்கும் - அதன் 
அத்தனை சிறகும் உன்னையே தாக்கும். 
ஆயிரம் இசை எனக்குள் உயிர்க்கும் - அதன் 
அத்தனை ராகமும் உனக்குள் இசைக்கும்.. 
நீ வேறு நான் வேறல்ல.. 
நாம் வேறு காதல் வேறல்ல.. 
விடியும் வரை பேசிட 
முடியுமிந்த காதலால்.. 
அதன் பின்னும் பேசிட 
கூடிடுமே இந்த நெருக்கத்தால் 

ஒரு மாலையில் உன் கை கோர்த்துத்தான் 
ஒரு சாலையை நானும் கடந்திட்டேன்.. 
ஒரு காலையில் நேர்ந்த காயத்தை 
ஒரு இரவினில் வந்து ஆற்றினாய் 
உனக்குள்ளே பல திறமை 
ஒளிந்திருக்க நானறிவேன்.. 
எனக்குள்ளே ஒரு பொறுமை 
ஒளிந்திருக்க நீயறிவாய்.. 

அட தேனாய் உன் குரல் மாறுதே 
அதைக் குடித்திட தாகம் கூடுதே.. 
அட யாவும் சொல்லியபின்னுமே 
அடம்பிடிக்கிற உன் குணம் மாறுமா?

ஒரு மழைநாள் ஒன்றில் இருவரும் 
நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்திட்டோம்.. 
ஒரு கோடைவெயிலின் வெப்பத்தில் 
பூங்காவொன்றில் சந்தித்தோம்.. 
உனக்குள்ளே ஒரு மயக்கம் 
இருந்ததையும் நானறிவேன்.. 
எனக்குள்ளே ஒரு தயக்கம் 
இருந்ததையும் நீயறிவாய்.. 

என் கனவினை நான் சொல்லிடும் 
நாள் வந்ததே.. 
என் எதிரினில் என் கனவிங்கே 
நடமாடுதே..
(ஒன்றா ரெண்டா ஆசைகள் - காக்க காக்க)உன்னைக் கண்ட நொடியில் அன்பே நான் பிறந்தேன் 
உள்ளத்திலே உன்னை உடுத்தி நான் அலைந்தேன்
உந்தன் ஒற்றை வார்த்தை என்னை இயக்கியதே 
என்றும் அது வேண்டும் என்று தவிக்கிறதே

தண்ணீருக்குள் உப்பாய் இனிப்பாய் நான் கரைந்தேன்
கண்ணீருக்குள் என்னைக் கொண்டு நான் கரைத்தேன் 
ஒரு கனவோ ஒரு நிஜமோ அது எதுவோ இயல்பதுவோ 
உன்னில் உறைந்தேன் என்னை மறந்தேனே 

காலை மாலை நேரம் இல்லை 
உந்தன் போதனை 
நான் தூங்கும் போதும் உன் நினைவு 
எந்தன் தலையணை 
கையில் கொஞ்சம் வண்ணம் கொண்டேன் 
உன்னை தீண்டினேன் 
என் வானமெங்கும் வண்ணம் செய்தாய் 
உன்னை வேண்டினேன்.. 
கையில் கொஞ்சம் வார்த்தை கொண்டேன் 
உன்னில் தூவினேன் 
என் வாழ்க்கைகொரு வார்த்தை செய்தாய் 
உன்னில் வாழ்கிறேன் 

தாயில்லா பிள்ளை என்னை தவிக்க வைக்கிறாய் 
என் தாயைப் போல உன்னைக் கண்டேன் சிறக்க வைக்கிறாய் 
சோகம் வந்த போது எல்லாம் சோர்வு நீக்கினாய் 
என் காலம் முழுதும் உன்னைக் கேட்டேன் நெஞ்சைத் தாக்கினாய் 
பூவைப் போல பூத்திருக்கும் எனது ஆசைகள்  
நீ வரும் வரையும் காத்திருக்கும் உயிரின் தேவைகள் 
உடனோ முரணோ ஏதும் எனக்கு சம்மதம்தான் 
உயிரோ கயிறோ தந்து செல்லு உன் விருப்பம்தான் 
(உப்புக்கல்லு தண்ணீர்க்கு - கருப்பசாமி குத்தகைக்காரர்)முன் இரவினில் பேசிய பேச்சுக்கள் 
பின் இரவினில் நிகழ்ந்திடும் என்று 
எந்த கிளி சொன்னது?

உனக்குள் நானும் 
எனக்குள் நீயும் 
வந்தது ஆதி கதை.. 
உனக்குள் நீயும் 
எனக்குள் நானும் 
சென்றது மீதி கதை.. 
ஆதிமுதலே நானும் உன்னில் 
அமிழ்ந்து போனேன் உண்மை 
மீதி காலம் எங்கு போவேன்?
வந்திட வேண்டும் அன்பே.. 

ஏதோ உனக்குள் ஒருசிறைதான் 
நீயே கொண்டாய் பலமுறைதான் 
அதனை விட்டுத் தள்ளிடு 
காதலை தொட்டு அள்ளிடு 
முன்னொரு காலம் நாம் வாழ்ந்த 
வாழ்க்கை வாழ 
இன்றொரு வாய்ப்பு வந்தது 
வாழ்ந்திட வா.. 

நேற்று என்பது பாரத்திலே 
நாளை என்பது தூரத்திலே 
இன்றுதான் அருகினிலே 
இமையின் நடுவினிலே 
உனதொரு கையில் ஒரு பூவாய் மாறிடவா
எனதொரு வாழ்க்கை உனக்கேதான் வார்த்திடவா.. 

நமக்கு இடையில் ஒரு மௌனம் 
வேண்டாம் அன்பே அது மரணம் 
நேரில் சிரித்துக் கொன்றாய் 
நினைவில் ரசித்து நின்றாய்.. 
இரவுகள் தோறும் உன்னோடு நானிருந்தேன் 
இனிவரும் இரவும் உனக்குள்தான் நானிருப்பேன்
(உனக்குள் நானே - பச்சைக்கிளி முத்துச்சரம்
)


2 கருத்துகள்:

கவி ரூபன் சொன்னது…

பாரதி,

சின்ன சந்தேகம்(உனக்குமா?). உங்கள் கவிதைகளுக்கு அவா்கள் பாடல்கள் எழுதினார்களா அல்லது அவா்கள் பாடலுக்கு நீங்கள் கவிதை எழுதினார்களா?

கனகச்சிதமா பொருத்தமா இருக்கு கவிதைகள்.

உங்கள் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்டே இருக்கே... ஏன் அப்படி?

Ramesh Ramar சொன்னது…

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

கருத்துரையிடுக