என் இன்னொரு காதலும் உன்னிடமே

வெள்ளி, 28 ஜனவரி, 2011


இந்த வாழ்க்கை மிக அழகானது என காதலிப்பவர்களுக்கு தெரியும். வலியானது என்பதும் அவர்களுக்குத்தான் தெரியும். காதல் தவிர இந்த உலகத்தில் ஈர்ப்பும், இயக்கமும் தரக் கூடிய விஷயம் வேறேதுமில்லை. அவள் அழுதால் அழுது, அவன் சிரித்தால் சிரித்து, அவன் துவண்டால் தூக்கி நிறுத்தி, அவள் விழுந்தால் தாங்கி, இப்படி காதல் எல்லாமுமாய் நம்மை ஆளும் போது நாம் காதலால்தான் இயங்குகிறோம் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது - இது கிரேக்கப் பழமொழி.
நிச்சயமாய் மறுக்க முடியாது. முதல் முறை, இரண்டாம் முறை உன்னைச் சந்தித்ததை விட அதற்கடுத்த சந்திப்புகளில் நீ அழகாய்த்தான் தெரிந்தாய். நானும் அழகானேன். அதை என் தோழிகள் வாயிலாக கேட்டிருக்கிறேன்.. இந்த வாழ்க்கையும் அழகாகும். நாம் காதலால் வாழும் போது. வா எப்போதும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

நீ நீயாகத்தான் இருக்கிறாய். நான்தான் நானாக இல்லை - மு.மேத்தா.
எவ்வளவு நிதர்சனமான வரிகள். எப்போதும் போல் இருக்க முடிந்தால் நமக்குள் காதல் இல்லை என்று பொருள். எப்போதும் இப்படி இருந்ததில்லை என்றால் நமக்குள் காதல் இருக்கிறது என்று அர்த்தம். நீ எந்த அர்த்தத்தை உணர்ந்திருக்கிறாய். உண்மை சொல்லிவிட்டால்.. உனக்கு அறியத் தருவேன். இந்த மாபெரும் வாழ்க்கையில் இழையோடும் சிறு சிறு சந்தோஷங்களை, கொஞ்சல்களை, மிஞ்சல்களை, அதைத் தாங்கி வரும் என் அஞ்சல்களில்..

காதலிக்கப் படுகிறவனாக மட்டும் இருந்தால் போதாது, காதலிக்கப்படுகிறவனாக சொல்லப்படவும் வேண்டும் - ஜார்ஜ் எலியட்
நான் எப்போதோ என் கவிதைகளில் சொல்லிவிட்டேன். இன்னும் பிடித்து வாய்த்த பிள்ளையார் மாதிரி நீ இருக்கிறாய். என்னால் தோப்புக் கரணம் போட்டு உன் கவனத்தைக் கவர முடியாது. தொப்பென்று விழுந்து உன் காதலில் நனைந்ததை உன்னிடம் சொல்லிவிட்டேன். நீ தனியே குளித்து தலை துவட்டியிருப்பாய் என்று நினைக்கிறேன். சொல்லிவிடு உன் உள்ளே பூட்டி வைத்திருக்கும் காதலை.. காதல் வரும் சொல்லியனுப்பு.. அதுவரை உயிரோடு காத்திருப்பேன்.. உன் வீட்டருகில்..

உன் அலமாரியில்.. உன் படுக்கையருகில்.. உனக்குள்..

இனிமையான சந்தோஷமும் வலி மிகுந்த காயமுமே காதல் - பேர்ல் பெர்லி
நாம் இரணடையும் அனுபவித்து இருக்கிறோம். இனியும் என்ன மௌனம்? மடைதிற.. வெடித்துச் சிதறட்டும் உனக்குள் தேக்கி வைத்திருக்கும் காதல். இன்னுமோர் சந்திப்பில் நாம் பேச வேண்டியது நாம் காதலைக் குறித்தானதாக இருக்க வேண்டும்.

காதலே என் மதம். அதற்காக இறப்பேன். உனக்காக இறப்பேன் - ஜான் கீட்ஸ்
உலகத்தில் சமீபத்திய ஆய்வுப்படி தொண்ணூறு சதவீத தற்கொலைகள் காதல் தோல்வி காரணமாக நடந்திருக்கிறது. இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் செய்துகொள்ள தயாரான, தகுதியான இரண்டு பேர் நேசம் கொண்டு அனைத்தையும் பகிர்வதற்கு பெயர்தான் அந்த செயலுக்குத்தான் காதல் என்று பெயர். அது திருமணத்திற்குப் பின்னும் இருக்கக் கூடிய ஒன்று. அதை விட்டு ஒரு குடும்பத்தில் இணைந்து இருக்கும் போதே மற்ற ஒருவருடன் கொள்ளும் உறவுக்கு அல்லது தொடர்புக்கு பெயர் கள்ள உறவு. அது கள்ளக் காதல் அல்ல என்பதை நினைவில் கொள்க. காதல் என்பது எப்போதும் நல்ல காதல்தான். சில வார்த்தை பிரயோகங்களை நாம்தான் மாற்ற வேண்டும்.

காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது - கலீல் கிப்ரான்
உண்மைதான். சில நாட்களாய் என் தோட்டத்தில் பூக்கள் மலர்வதில்லை. என் உயிர்செல்களில் துடிப்பு இல்லை. என் கண்கள் பார்வையை இழக்கின்றன. என் கைகள் பலவீனமாக இருக்கின்றன. இதயம் இரத்தத்தை கடத்துவதில் முரண்படுகின்றன. மூளைச்செல்கள் முரண்டு பிடிக்கின்றன. விரைவில் வந்துவிடு. ஒரு உயிரைக் காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறேதும் முக்கியம் இல்லை. இன்பமும் இல்லை.

காதல் என்பது நெருப்பு. உன் இதயம் குளிர்காயப்போகிறதா? அல்லது உன் வீடு தீப்பற்றப் போகிறதா? என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது - ஜோன் கிராபோர்டு
என் இதயம் குளிர் காயவும், தீப்பற்றி எறியவும் சம்மதமே. நீதான் தீ வைக்கிறாய் எனில். அதற்காக தீப்பந்தம் ஏந்தி வராதே. என் இதயம் உன் காதலில் எரிந்துவிட்டது. அதன் சாம்பலையேனும் பாதுக்காக புறப்பட்டு வா. மீண்டும் பீனிக்ஸாய் உயிர்த்தெழுவேன். பின் உன் நிழலில் குளிர் காய்வேன்.

நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும் வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன் - ஷேக்ஸ்பியர்
காதல் என்பது மரணமற்றது. அதற்கு இந்த உலகம் சாட்சி. எத்தனைக் காதலை இந்த உலகம் பார்த்திருக்கிறது. இன்றும் அவர்கள் காதல் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மரணமற்ற காதல் நம்மை தேடி வந்திருக்கிறது. அணைத்துக் கொள்வோம் நமதிரு கைகளால்..

கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல் - மார்க் ட்வைன்
கட்டுப்படுத்த முடிவதில்லைதான். காதலினூடாக வழங்கப்படும் சந்தோஷமும், துக்கமும் கூட கட்டுப்பாடற்றது. கட்டுப்படுத்த முடியாத இந்த இதயத்தை கட்டிப்போடும் வித்தை உன் குரலுக்கு உண்டு. கட்டுப்படுத்த  முடியவில்லை..கண்ணீரில் கரைகிறேன்.வலியால் துடிக்கிறேன்.  வந்துவிடு.

ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள் - ஆஸ்கர் ஒயில்டு
இது எத்தனை உண்மை. என் முதல் காதலும் கடைசி காதலும் நீதானென அறிந்து கொள். நீ நினைப்பதும் நான் நினைப்பதும் எந்த புள்ளியில் வேறுபட்டாலும் நம்மால் இணைந்திருக்க முடியும் ஒரு முற்றத்தின் கோலத்தைப் போல அல்ல. நடச்சதிரங்களின் நெருக்கத்தைப் போல.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள் இருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் நுனிவரை காதலால் நீவி சாபமேற்று உறைந்து போன இரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள் - சச்சிதானந்தன்
நீ என்னை உயிர்ப்பித்து விட்டாய். உயிர் கொண்டு திரியும் இந்த கவிதை பொம்மையை தொலைத்து விடாதே. பத்திரப்படுத்து. உன்னால் எதுவும் முடியும் எனபதை நானறிவேன். நீ என்னிடம் திரும்பி வருவாய் என்பதையும்.

 ஒரு காதல் தோல்வியிலிருந்து மீள இன்னொரு காதலே தீர்வெனில் என் இன்னொரு காதலும் உன்னிடமே - இவள் பாரதி
இதற்கு மேல் மேற்கோள் காட்ட முடியாது. இவையெல்லாம் சொல்லித்தான் நீ உன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது இல்லை. நமக்கான வாழ்க்கை அழைக்கிறது. வாழத் தயாராவோம். வாழ்வோம் மகிழ்வாய். உன் வாய் திறந்து ஒற்றை வார்த்தை சொல்வாய். காத்திருக்கிறேன் உன் அழைப்பிற்காய்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக