காதல் எது? நட்பு எது?

திங்கள், 15 மார்ச், 2010

முதல் பக்கம்


ஒவ்வொரு கேள்வியாய் எனக்குள் முளை விட்டுக் கொண்டே இருக்கிறது. இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புவது எப்படி சாத்தியம்? நாளை உனக்கொரு வாழ்க்கை வரும் போது இதே நெருக்கம், அன்னியோன்யம் நமக்குள் இருக்குமா? அப்போது என்னைப் பிரிவதற்கு தயாராகத்தானே இருக்கிறாய். நட்பும், ஈர்ப்பும் இருக்கும் இந்த உறவு அடுத்த நிலைக்கு செல்வதில் என்ன சிக்கல்? அதன் பயணம் குறித்துத்தானே.. அது பயணப்பட்டால் தானே தெரியும். நீ சொல்வது போல் அந்த பயணத்தில் சிக்கல் ஏற்பட்டால் மீண்டும் நட்பு என்கிற பெயரில் கூட உலவ முடியாது என்கிறாய்.. சரி.. அப்படி என்ன சிக்கல் வருமென்று நீ அறிந்தாய்.. சிக்கல் வருமென்று தெரிந்தால் எதைத்தான் செயல்படுத்த முடியும்? எல்லா உறவிலும் சிக்கல் இருக்கத்தானே செய்கிறது. உனக்கு இதுவரை காதலே வந்தது கிடையாது என்கிறாய். ஏழு மாத காலம் உன்னிடம் என்னிலிருந்து கொட்டியவை எல்லாம் நட்பின் உள்ளீடான காதல் என்று ஒருமுறை கூட நீ உணரவில்லையா? நட்பில் இருக்கும் காதலையும், காதலில் இருக்கும் நட்பையும் அறிய முடியாதவனா நீ?

நான் ஆரம்பத்தில் இருந்தே நட்பைத் தாண்டிய ஒரு உணர்வில்தான் பழகி வருகிறேன் என்பதை உனக்கு உணர்த்தி இருக்கிறேன். நீயும் கூட அது எதையும் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. மௌனித்தே என்னை ஆட்கொண்டிருந்தாய். ஒருவேளை இது நட்புதான் பெரிதாக ஆசையை வளர்த்துக் கொள்ளாதே என்று நீ அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது உன் மீது குற்றம் சாட்டவோ, என்னை நிரூபிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை

இரண்டாம் பக்கம்

காதல் இயல்பாக வர வேண்டும். அது திணிக்கப்படக்கூடாது. நான் அதைத்தான் விரும்புகிறேன். இது நிராகரிப்பல்ல என்கிறாய்? அப்படியெனில் இதற்கு பெயர் என்ன? உன்னை எப்படி புரிந்து கொள்வது? இந்த நட்பு ஆயுள் முழுதும் இதே இறுக்கத்துடன் வேண்டும் என விரும்புகிறாய். இதில் இரண்டு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை நானே இணையாகும் பட்சத்தில் நட்பு வேறொரு பரிமாணத்தில் காதலாகி அது இன்னும் வேறு சில எல்லைகளைத் தொடும் போது நட்புக்குள் இருந்த காதல் உருமாறி காதலுக்குள் ஒரு நட்பு ஜனித்திருக்கும். அப்போது நீ நினைத்தது போல் இந்த நட்பு வேறொரு புதிய பயணத்தை ஆரம்பிக்கும். இது இல்லாமல் நீ வேறொரு வாழ்க்கையில் புகும்போது நமக்கிடையேயான நெருக்கம் ஒரு மலையிலிருந்து துண்டாகப் பிரிந்து விழும் பாறையைப் போல, பனிமலையின் ஒரு பகுதி பிரிந்து கடலோடு போவது போல போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. இதே நட்பு அதன் பிறகும் இப்படித் தொடராது. அப்படியெனில் நீ இந்த நட்பை இழக்க நேரும். முதல் வழியில் நாம் ஒரே திசையில் வேறொரு புதிய பயணத்தைத் தொடர்வோம். இரண்டாவது வழியில் நமது பயணம் தனித்தனி திசையில் அமையும் போது ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனக்கு விட்டுத் தரக் கூடிய பக்குவமில்லை. 

அதே நேரத்தில் இதையெல்லாம் உன்னிடம் சொல்லி என்னை ஏற்றுக் கொள்ள வைப்பதில் உடன்பாடில்லை. உனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாத போது அதை திணிப்பது தவறு. அதுமட்டுமின்றி என்னைப் பொறுத்தவரை இருவருக்கும் இயல்பாக அந்த எண்ணம் தோன்ற வேண்டும். ஒருவர் ஒருவரின் மீது திணிப்பது நட்புக்கு அழகல்ல. காதலுக்கும் முறையல்ல. நீ சொல்வது போல் பார்த்தால் இது நட்பை விஞ்சிய உறவு. இன்னும் சொல்லப் போனால் காதலைத் தொடாத உறவு. நட்புக்கும், காதலுக்கும் இடையே நூலிழை போல் நகரும் இந்த உறவினை எது விழுங்க இருக்கிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும். அதனால் தான் இன்னும் சிறிது அவகாசத்தை என் தந்தையிடம் கேட்டிருக்கிறேன். இந்த இடைவெளியில் நிகழும் நம் பயணத்தில் வேறொரு பரிமாணம் கூட நிகழ வாய்ப்பிருக்கலாம். 

மூன்றாவது பக்கம்

என்னைப் பொறுத்தவரை நட்புக்கும், காதலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நட்பில் வெளியாகாத இன்னும் சில கதவுகள் காதலில் திறக்கும். நட்பில் வெளியான சில கதவுகள் காதலில் மூடிக் கொள்ளும். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் போது பழையன கழிந்து புதியன புகும். பழையதே போதும் என்று தேங்கி விடுவது எந்த வகையில் நியாயம்? ஆனால் இப்போதும் உன்னை வற்புறுத்தவில்லை. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே. நட்புக்கும், காதலுக்கும் நூலிழை வேறுபாடுதான். காதலில் உடலும், உள்ளமும் பேசும். நட்பில் உள்ளம் மட்டுமே பேசும். அவ்வளவுதான்.

எனக்கு நீ காதலின் வெளிகள் பற்றி சில முன்னுரைகள் கொடுத்தாய். அவை எனக்கும் தெரியும்தான். அதற்கு சில எல்லைகள் உண்டு என்பதை நானுமறிவேன். அதைப் புரியாமலா உன்னுடன் நெருங்கியிருப்பேன். ஒன்று வேறொன்றாக பரிணமிக்கும் போது ஒன்றும் அதில் இருக்கத்தான் செய்யும். ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் போது அங்கே ஒன்று அழிந்தாவிடும்? இரண்டுக்குள் ஒன்று இருக்கத்தானே செய்யும். இப்படியெல்லாம் விளக்கி உன்னை மனமாற்ற விரும்புகிறேன் என்று எண்ணி விடாதே. அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன். ஒருவேளை உனக்கு இதையும் மீறிய சில எண்ணங்கள் இருக்கலாம். என் கடந்தகாலத்தின் பக்கங்களில் சிலவற்றைக் காண்பித்ததால் நீ சற்று பின்வாங்கியிருக்கலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உன் மீதான ஈர்ப்பு குறைந்து போய் விடாது. இப்போது இருக்கும் நெருக்கத்தில் இருந்து விலகிப் போய் விடமாட்டேன். இன்னுமாய் நெருங்குவேன். 

நான்காவது பக்கம்

சில கேள்விகளை உன்னிடம் முன்னிறுத்துகிறேன். அவ்வளவே. இன்னும் சில நாட்கள் சென்றால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது உன் மனம் மாறலாம். நீ காதலிக்கவே தெரியாதவன் என்கிறாய். அப்படியல்ல. நீ காதலை உணராதவன் அவ்வளவே. இது காதலா என்று கூட அறிந்து கொள்ள முடியாதவன் வேறென்ன சொல்ல. அல்லது அறிந்தும் பின்வாங்க வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். நீ ஒத்துக் கொள்ள தயங்கலாம்.

இதையெல்லாம் சொல்வதால் என் காதலை உன் மீது திணிப்பதாகவோ, நிராகரிக்கப்பட்டதின் வெளிப்பாடாகவோ, புறக்கணிப்பின் வலியாகவோ, ஏதிலியின் எண்ணங்களை முன் வைப்பதாகவோ நினைத்து விடாதே. உன்னைப் போல் என்னை யாரும் அசைத்து சென்றதில்லை. உன் விலகல் தான் நான் நெருங்க இன்னும் காரணம். ஒரு பெண் எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே உன்னிடம் என்னைத் திறந்து காட்டியிருக்கிறேன். ஒரு படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் அது எனக்கு சாத்தியமாயிருக்கிறது. ஒருவருக்கொருவர் ஒரே அலைவரிசையில் இந்த நிமிடம் வரை பயணிக்கிறோம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இன்னும் இது காதல்தான் என்று அறியாமல் இருக்கிறாயா? 

தொடுதல் மட்டுமே காதலாகுமா? தொடாமல் இருந்தால் அது நட்பாகவே பயணிக்கும் என்றும், தொட்டுக் கொண்டே இருப்பது காதலென்றும் உனக்குள் பதிவாகியிருக்கிறது. அதனால்தான் அது பற்றியான சில விஷயங்களை நீயே கூறினாய். நமக்குள் இருக்கும் தொடுதல் ஒரு கவிதையைப் போலானது. 

ஐந்தாம் பக்கம்

நட்பில் முத்தம் கொடுப்பது கூட இருக்கிறது. சலனமற்ற, சலசலத்துப் போகும் நீரோடை போலான நட்பில் அனைத்தும் இருக்கும். தொடக் கூட இல்லாத, நேரில் பார்க்காமலே கூட காதல் உச்சத்தில் இருக்கும். உனக்கு சில புரிதல்களைத் தருவது என் தலையாயக் கடமையென்று நான் நினைக்கவில்லை. எப்படியெல்லாம் நான் சிந்திக்கிறேன் என்பதின் வெளிப்பாடே இவை. 

இது நட்பைத் தாண்டிய உறவு என்பதை நீ உணரும் வரை காத்திருப்பேன். இந்த காத்திருப்பு சுகமும், வலியுமானது. எனக்கு ஒரு சேர வலியையும், சுகத்தையும் தர உன்னால் முடிகிறது. உன்னை விட்டு இன்னொருவர் மேல் ஈர்ப்பு வர வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. முதல் காதல் எல்லாம் வெற்றி பெறுவதில்லை என்று வேதாந்தம் பேசுகிறாய். இது என் முதல் காதல் தான். நான் வெற்றி பெற்றவள்தான். நான் நேசித்தபடியே ஒருவன் இருக்கிறான் என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. 

யாருடனும் என்னை ஒப்பிடாதே. நான் உன்னை உலுக்கி எடுக்கும் அளவுக்கு, போட்டுத் தாக்கும் அளவுக்கு நெருங்கவில்லை என்பதுதான் உன் நட்பின் எல்லை தாண்டாத காரணமா? நான் எதிர்பார்ப்பது இந்த தூய நட்பினூடாக பயணப்படும் காதலை.

ஆறாம் பக்கம்

கோபத்தில் உள்ள அன்பையும், மௌனத்தில் உள்ள வார்த்தையையும் யாரால் உணர முடியுமோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் கூற்று உண்மையெனில் நீ அந்த தகுதி உடையவன்தானே. இது காதல் தான் என்பது உனக்குப் புரியவில்லை. அதை புரிய வைக்க நானும் முயலவில்லை. உன்னை என் உறவு அசைத்துப் போட்டிருக்கிறது என்பதை நீயே ஒப்புக் கொண்டாய். சாதாரண ஒரு நட்பு இந்த அளவுக்கு உன்னைத் தாக்குமா? உடலையும் , மனதையும் ஆட்டி படைக்குமா? அடுத்த நொடியின் அசைவினை அறிந்து கொள்ள ஆவல் படுமா? இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறாய்? 

ஏன் அடுத்த பரிணாமத்தை நினைத்துப் பயப்படுகிறாய்? எனக்குப் புரியவில்லை. நடந்தே அறியாத பாதையில் முள் குத்தினால் என்ன செய்வது என்று அந்த பயணத்தை துவக்காமல் இருப்பதில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடக் கூடும்? எதையும் உனக்கு புரிய வைக்கப் போவதில்லை. அனைத்தும் புரிந்தவன் நீ. எப்போது நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது என்ற நிலை வருகிறதோ அப்போது தேடி வருவாய்.. அந்நேரத்தில் உலகத்தின் ஏதாவதொரு மூலையில் இருப்பேன் என்று எழுத ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவரை நான் இருப்பேனா என்றுதான் தெரியவில்லை. அதாவது மீண்டும் பழையபடி எதிர்மறையாக சிந்திக்கிறேன் என்று நினைத்து விடாதே.. இதே மனநிலையில் அப்போது இருப்பேனா என்றுதான் கேட்க வந்தேன். 

ஏழாம் பக்கம் 

காதலென்றால் அத்து மீறுவதுதானா? அத்து மீறுவதுதான் காதலாக இருக்க முடியுமா? நட்பு எப்போதுமே அத்து மீறாமலிருக்குமா? இந்த கேள்விக்குள் பல விஷயங்கள் புதைந்திருக்கிறது. நட்பு எனும் பெயரில் நீடிக்கும் சில கட்டற்ற உணர்வுகளும், காதல் எனும் பெயரில் அழகாய் பூத்திருக்கும் நட்பின் பரிமாணத்திற்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

இந்த நட்பின் பரிமாணம் உச்சியைத் தொட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் வேறொரு பரிமாணமான காதலில் பயணப்படும் போது அது நட்பைப் போலவே வேறு ஒரு உச்சத்தைத் தொடுமா? அல்லது சிறு சிக்கலால் அது காதலையும் இழந்து நட்பையும் தொலைக்க வேண்டியிருக்குமோ? என்பது உன் பயமாக இருக்கிறது. அறிந்திடாத ஒன்றைப் பற்றி எப்படிக் கருத்துக் கூற முடியும்? இவையெல்லாம் உன் வாதங்களாக, கேள்விகளாக இருக்கின்றன. எனக்கும் இதற்கு பதில் தெரியவில்லைதான். இருந்த போதும் எனக்கொரு கேள்வி. இப்போதிருக்கும் நட்புக்கும், அதன் அடுத்த கட்டமான காதலுக்கும் என்ன வேறுபாடு இருக்கப் போகிறது என்பதை நீ தெளிவுபடுத்து. அன்பு என்பது எந்த நிலையிலும் மாறாமல் இருப்பது. மாறிக் கொண்டே இருப்பது அன்பாகாது. அன்பை வெளிப்படுத்தும் விதங்கள் மாறலாம். ஆனால் அன்பு மாறாது. என்னுடைய அதிக பட்ச புரிதல் நட்பும், காதலும் சிறிய வேறுபாடுடையது. அது தொடுதலாலனது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

‘‘ தொட நினைத்து தொடாமல் பேசுவது காதல்
  தொட நினைக்காமலே தொட்டு பேசுவது நட்பு ’’
இந்த வார்த்தைகளில் எனக்கும் உடன்பாடு உண்டுதான். ஆன போதும் எனக்கு நிறைவளிக்கும் வார்த்தைகள் அல்ல இது. 

எட்டாம் பக்கம்

அந்த வகையில் வேறு ஏதேனும் உப்புச் சப்பில்லாத காரணங்கள் சொல்லாமல் இந்த காரணத்தை சொன்னதற்காக உன்னைப் பாராட்டுகிறேன். என் பயணத்தில் நோக்கம் ஏதுமின்றியிருந்தது. உன்னைச் சந்தித்த பின் சில நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டேன். எனக்கும் கூட இந்த உறவு நிலை பிடித்துதான் இருக்கிறது. ஒவ்வொரு அசைவுகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ளும் பாசாங்கற்ற வெளிகளில் நமக்கான எல்லா சுதந்திரமும் இருக்கிறது. இதை இழக்க விரும்பவில்லை என்பது இருவரின் முடிவாக இருக்கிறது. 

ஆனால் உனது முடிவில் இன்னொரு விஷயத்தையும் கவனித்தாக வேண்டும். எனது நோக்கம், எனது விருப்பம், எனது தேவை இவையனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒன்றை மட்டும் கவனித்துப் பார். இந்த நட்பு காதலாகும் போது என்ன சுவையிருக்கும்? என்பதை உன்னால் உணர முடியவில்லை என்கிறாய். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து உன்னுடன் அப்படித்தான் பயணப்பட்டிருக்கிறேன். அதை விடு. இந்த நட்பின் சுவைக்குள் காதலின் வேர் இருக்கிறது என்பதை உன்னால் உணர முடியவில்லை. ஏனெனில் காதல் எது? நட்பு எது? என்பதை புரிந்து கொள்வதில் இருவருக்கும் வேறுபாடு இருந்து வருகிறது. இது ஒன்று. இன்னொன்று நாளை நீ வேறொரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் போது எனக்களிக்கப் பட்ட இடத்தில் பாதியை நீ பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கும். இப்போது இருக்கும் பரிமாற்றங்கள் குறையும். பரிமாற்றம் குறைவதாலயே நட்பு இல்லை என்று ஆகிவிடுமா? மாற்றங்கள் இயல்பானது தானே என்பது உன் கேள்விகளாக இருக்கலாம். 

நிச்சயமாய் இப்போது இருக்கும் நிலை அப்போது கண்டிப்பாக இருக்காது. இரவுகளில் நெடுநேரம் நீ எனக்காகவும், நான் உனக்காகவும் விழித்திருப்பது. ஒன்றாக சேர்ந்து திரைப்படம், பூங்கா, கடற்கரை என்று செல்வது சாப்பிட்டாயா? தூங்கினாயா? என்ன செய்கிறாய்? இந்த கவிதை எப்படியிருக்கிறது? என்ற பரிமாற்றத்திற்கான பாதை இவையெல்லாம் தடைபடும். அடைபடும். 

ஒன்பதாம் பக்கம்

இந்த இழப்புகளை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தால் என் மீதான உன் நேசம் வலுவானதல்ல என்பது தெளிவாகும். அல்லது இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போனால் இது வெறும் நேசமல்ல என்பதும் இதனூடாகவே இருவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் புரியும். 

என் சிந்தனைகளில் உன்னை நிறைத்துக் கொண்டு வேறொரு வகையில் பயணத்தைத் தொடர எனக்கு வலு கிடையாது. அதற்கு அவசியமுமில்லை. உன்னை வற்புறுத்தி என் காதலை திணித்து என் பாதைக்கு உன்னை இழுக்கும் விருப்பம் துளியும் இல்லை. அதை நான் ஏற்கவும் மாட்டேன். எந்த வகையிலும் உன்னைக் காயப்படுத்திடவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். 

நான் உனக்கு தகுதியானவளா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நீ தகுதியானவன் என்றே நினைத்திருந்தேன். அதனால் தான் என் படைப்பின் வழியெங்கும் உன் நிழல் பட்டே என் வார்த்தைகள் பூக்கிறது. மணம் பரப்புகிறது. நான் நீ சொல்வதையெல்லாம் சரியென்று ஏற்றுக் கொண்டு வேறொரு பயணத்தைத் தொடர முடிந்தால் இதுவரை நீண்ட உன்னுடனான எனது பயணமும், உனக்காகவே எழுதப்பட்ட, உன்னாலே எழுப்பப்பட்ட என் படைப்புகள் அனைத்தும் போலித்தன்மை உடையதாக மாறி விடும். இதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கா மாட்டேன். ‘தாய்மை’ என்ற ஒன்றைத் தவிர நான் இந்த உலகில் வேறெதையும் பெற விரும்பவில்லை. 

பத்தாம் பக்கம்

என் அகராதியில் காதல் என்பது உச்சபட்ச நட்பு.. நல்ல நட்பு எல்லா இடத்திலும் காதலாக மலர்ந்து விடுவதில்லை. கடல் முழுவதும் மழை பொழிகிறது. எல்லா துளிகளும் முத்தாகி விடுகிறதா? உப்பாகத்தானே போகிறது. நான் முத்தெடுத்து விட்டேன். இனி அதை ஆபரணமாக அணிவதில்தான் எனக்கு சிக்கலே ஒழிய வேறெதுவும் இல்லை. இப்போதும் சொல்கிறேன். உன் மனம் மாற வேண்டும் என்பதற்காக எழுதுவதாக நினைத்து விடாதே. எப்போதும் போலான என் சிந்தனைகளின் வெளிப்பாடே. 

இந்த வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. உடலை ஆக்கிரமித்த வலி ஒரு சில நிமிடங்களில் விலகிப் போகும். உள்ளத்தை ஆட்கொண்ட வலி மண்ணோடு போகும் போது அறுத்துக் கொண்டே இருக்கும். இதில் உனக்கு எந்த பங்கும் இல்லை. நீ நீட்டிய நட்பின் கையை நான் என் காதலின் கை கொண்டு பிடித்துக் கொண்டது என் தவறுதான். உன் மீது எந்த தவறும் இல்லை. 

ஆனால் இதை விதையாயிருக்கும் போதே கிள்ளி எறிந்திருந்தால் வலியும் குறைந்திருக்கும். வந்த சுவடும் மறைந்திருக்கும். வேர் விட்டு விழுதும் கண்ட பின் சொல்கிறாய்.. என்ன செய்ய? வெட்டி எறிய முடியவில்லை. அப்படியே புதைக்கவும் முடியவில்லை. நான் புதைந்தால் ஒழிய இந்த எண்ணங்கள் புதையப் போவதில்லை. ஆனால் இந்த பயணம் நீடிக்கும். என்னைப் பொறுத்தவரை உன்னை விட்டு விட்டு எனக்கு வேறொன்றை சிந்திக்க முடியாது. அதற்கு பலமில்லை. உனக்கு அந்த பலம் இருக்கிறது என்பது உன் பேச்சில் தெரிகிறது. எதுவரை உனக்கும் எனக்கும் தடையில்லையோ அதுவரை பயணிப்போம். 

என் சின்னஞ்சிறிய இறகுகளில் நீ ஓவியம் வரைந்து கொள்ளலாம். உன் புன்னகையெல்லாம் கோர்த்து நான் மாலையாக்கிக் கொள்ளலாம். எதற்கும் தடையில்லை. இறுதியாக ஒன்று. இதுவரையான பயணம் உன்னைப் பொறுத்தவரை நட்பாகவும், என்னைப் பொறுத்தவரை காதலாகவும் பயணப்பட்டிருக்கிறது. 

இனி காலம் அந்த நேசத்தின் பயணத்தை முடிவு செய்யட்டும். அதுவரை சிறகடிப்போம் எப்போதும் போல் புன்னகயோடு..

பின்குறிப்பு:

உனக்கு இதையும் கடந்து வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று ஆழ்மனம் சொல்கிறது. அதை மறைக்கிறாய். இதை விட வேறு காரணம் ஒன்றை யோசி. ஆனால் இவ்வளவு விஷயங்களை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்பதையும் நானறிவேன். 

மீளா துயருடன் 
இவள் 

2 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

அப்பாடி! எவ்வளவு பெரிய இடுகை!!

Unknown சொன்னது…

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். காலிங்கராயர்.

கருத்துரையிடுக